Saturday, 23 February 2019

காஞ்சிபுரம் பெரியவாள்|| நிகழ்வுகள்


பெரியவாளுடன் நடந்தவைகள்

பெரியவாளுடன் இருந்து, அவருக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற பட்டாபி சார், உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்...

''அதுவொரு மார்கழி மாசம். கும்பகோணத்தில் என் தகப்பனாருக்குச் சிராத்தம் பண்ணிட்டு, பக்கத்துல 12 கி.மீட்டர் தொலைவுல இருக்கிற கோவிந்தபுரத்துக்குப் போனேன். அங்கே, காமகோடி பீடத்தின் ஆச்சார்யரான ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கு.

'ராம ராம'ன்னு சொல்லியபடியே, அந்த அதிஷ்டானத்தை 108 தடவை பிரதட்சிணம் பண்ணினேன். அங்கே, ராம நாமத்தை ஜெபித்தால், ஸித்தி கிடைக்கும்னு சொல்லுவா. அதிஷ்டானத்திலேருந்து எதிரொலி மாதிரி, 'ராம்... ராம்'னு குரல் கேட்கும். ரொம்ப விசேஷம். அதுக்காகவே நான் அங்கே அடிக்கடி போவேன்.

இப்படித்தான் 94-ஆம் வருஷம், ஜனவரி 2-ஆம் தேதி... அங்கே தியானத்திலே உட்கார்ந்திருந்தேன். அப்ப, அதிஷ்டானத்திலேருந்து திடீர்னு ஒரு குரல் கேட்டாப்ல இருந்தது எனக்கு. 'ஏய், இனிமே என்னை நீ இதேமாதிரிதான்டா பாக்கணும்'னு சொல்லித்து அந்தக் குரல். அது, பெரியவா ளோட குரல் மாதிரியே இருந்துது.

அப்படியே அதிர்ந்து போயிட்டேன் நான். சாதாரணமா அதிஷ்டானத்துல, 'ராம்... ராம்'னுதானே குரல் கேக்கும்! இதென்ன விசித்திரமா இருக்குன்னு தோணித்து எனக்கு. 'இதேமாதிரிதான்டா பாக்கணும் என்னை'னு பெரியவா சொல்றாளே... அப்படின்னா, ஸித்தியான மாதிரிதான் பார்க்கணுமா, பெரியவாளை?!'

யோசிக்கும்போதே தலை சுத்தித்து எனக்கு. மனசு ஒடிஞ்சு, நொந்து போயிட்டேன்.

சாப்பிடத் தோணலை. கண்ணை மூடிண்டு சித்த நேரம் தூங்கினா தேவலைன்னு பட்டுது. படுத்தா தூக்கம் வரலை. மனசுல இதே கேள்வி குடைஞ்சு, ஹிம்ஸை பண்ணிண்டிருந்தா எங்கேர்ந்து தூக்கம் வரும்? பேசாம பஸ் பிடிச்சுக் கும்பகோணம் வந்துட்டேன். உடனே காஞ்சிபுரம் போய்ப் பெரியவாளைத் தரிசிக்கணும்னு தோணித்து.

''என்ன அவசரம்... ரெண்டு நாள் இருந்துட்டுத்தான் போயேன்! ஏன் பித்துப் பிடிச்சாப்பல இருக்கே? வீட்ல ரெண்டு நாள் அமைதியா படுத்து ரெஸ்ட் எடுத்தா, எல்லாம் சரியாப் போயிடும்!''னு அம்மா சொன்னாள். சரின்னு, நானும் ரெண்டு நாள் கழிச்சுதான் காஞ்சிபுரம் போனேன். பெரியவரைப் பார்த்து, வழக்கம்போல் சேவைகள் பண்ணிண்டிருந்தேன்.

அதன்பிறகு, சில நாள் கழிச்சு... அதாவது 94-ஆம் வருஷம், ஜனவரி  8-ஆம் தேதி மகா பெரியவா ஸித்தியாயிட்டா!

அன்னிக்கு, அதிஷ்டானத்துல பெரியவா சொன்னது நிஜமாயிட்டுது. பெரியவா ளைத் தவிர, வேற யாராலேயாவது இத்தனை தீர்க்கமா சொல்லமுடியுமா? தெரியலை.

அப்புறம்... எனக்கு மூணு, நாலு மாசத்துக்கு சுய நினைவே இல்லை. அப்படியே பெரியவாளோட நினைப் புலயே ஆழ்ந்துபோயிட்டேன். 'பெரியவா முகத்தை இனி பார்க்க முடியாதே'ன்னு மனசு தவியாய்த் தவிச்சுது. சமாதானம் ஆகவே இல்லை. எப்படி ஆகும்?!

பெரியவா சொன்னதை எல்லாம் நினைச்சு நினைச்சுப் பார்த்தேன். ஒரு தடவை கி.வா.ஜ. சொன்னது ஞாபகத்துக்கு வந்தது...

''தர்மத்துக்காக வாழ்ந்தவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்தோம். இன்னொருத்தரைப் பார்க்க முடியலே! நாம பார்க்காதது ஸ்ரீராமரை; பார்த்தது, மகா பெரியவாளை! சந்நியாச தர்மம், யதி தர்மப்படி வாழ்ந்து ஸித்தி அடைஞ்சவர் மகா பெரியவர். அரச தர்மத்துக்குன்னு வாழ்ந்தவர் ஸ்ரீராமர்''னு சொல்லிட்டு, ''ஆத்ம பூஜை பண்ணினவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்திருக்கோம். இன்னொருத்தரைப் பார்த்ததில்லே. யார் சொல்லுங்கோ?'' என்று கேட்டார் கி.வா.ஜ. தொடர்ந்து, அவரே பதிலும் சொன்னார்...

''ஒருத்தர் ஆஞ்சநேயர். ஆத்ம லிங்கம் பண்ணி, தானே பூஜை பண்ணினார். இது ராமேஸ்வரத்தில் இருக்கு. ஆத்ம பூஜை பண்ணின மகா பெரியவாளை இப்போ பார்க்கறோம். ஆத்மாவை உயர்த்திண்டவா எத்தனை பேர்? இவர் ஒருத்தர்தான்! அவர் தனக்குத்தானே பூஜை பண்ணிண்டார். அதை நாம எல்லோரும் பார்த்து ஆனந்தப்பட்டோம்!''

எத்தனை சத்தியமான வார்த்தை!

பெரியவா ஸித்தி ஆயிட்டானு சொன்னேன் இல்லியா? பெரியவாளுக்கு 90-லிருந்தே உடம்பு படுத்திண்டு இருந்தது; க்ஷீணமாயிண்டு இருந்தது. ஒரு தடவை, ஸ்மரணையே தப்பிப் போச்சு. எல்லாரும் ரொம்பக் கவலைப்பட்டா.

ராஜீவ் காந்தி அப்போ பிரதமரா இருந்தார். அவருக்கு விஷயம் தெரிஞ்சு, அவரோட ஏற்பாட்டுல, 'டோட்டல் பாடி ஸ்கேனர்' கொண்டு வந்து பெரியவாளைத் தீவிரமா பரிசோதனை பண்ணிப் பார்த்தா. பெரிய பெரிய எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் வந்து சோதனை பண்ணினா.

ஒரு ஸ்டேஜ்ல, ஞானிகளுக்குத் தங்களோட சரீர ஸ்மரணை (தேக பாவம்) பரிபூர்ணமா விட்டுப் போயிடும்னு சொல்லுவா. யோக மார்க்கத்துக்குப் போயிடுவா. சுவாசத்தைக் கட்டுப்படுத்திண்டு இருப்பா. பெரியவாளும் அதே நிலையிலதான் இருந்தார். இது எனக்குப் புரிஞ்சுது. ஆனா, எதுவும் சொல்லாம, என்னை அடக்கிண்டு இருந்தேன்.

யோக நிலையில இருந்த பெரியவாளைப் பார்த்தேன். எந்தவித சரீர அவஸ்தையும் அவருக்கு இருக்கவே இல்லே! படுக்கைப் புண்ணுனு சொல்வாளே, அது மாதிரி எல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. ரோஸ் கலர்ல, தாமரை புஷ்பம் மாதிரிதான் அவரோட உடம்பு இருந்துது.

விஸர்ஜன துர்வாசனை எதுவுமே அவரிடம் இல்லை. காம- க்ரோதாதிகளுக்கு உட்பட்டவாளுக்குதான் அந்த மாதிரி துர்வாசனை எல்லாம் வரும்.

பெரியவாளுக்கு உடம்பு வேர்க்கவே வேர்க்காது, தெரியுமோ? மே மாசத்துல, 'மேனா'ல படுத்துண்டு, படுதாவைப் போட்டுண்டிருப்பார்! அப்பவும்கூட அவருக்கு வேர்க்காது. நானே பிரத்யட்சமா பார்த்திருக்கேன்.

ஸித்தியாகிறதுக்கு முன்னால, பெரியவா என்னைக் கூப்பிட்டார். ''நான் படுத்துக்கப் போறேன். நீ என்ன பண்ணப் போறே?''ன்னு கேட்டார்.

''நான் என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியலையே! பெரியவாதான் சொல்லணும்''னு அழுதுட்டேன்.

பெரியவா என்னைக் கருணையோடு பார்த்தார். ''கவலைப்படாதே! என் ஸ்மரணை உன்னைக் காப்பாத்தும்! சஹஸ்ர காயத்ரி சொல்லு. கங்கையிலே ஸ்நானம் பண்ணிட்டு, கங்கைக் கரையிலே உட்கார்ந்து சொல்லு. அது போறும்!''னார்.

அந்தப் பிரபுவோட ஸ்மரணையிலே என்னோட காலத்தைக் கழிச்சிண்டிருக்கேன். அதுவும் அவரோட அனுக்கிரஹம்தான்.

ஆனா, அன்னிக்குக் கோவிந்தபுரம் அதிஷ்டானத்துல அவர் குரல் கேட்டுதே... அதை மட்டும் என்னால மறக்கவே முடியலே. நான் மனசு சஞ்சலப்பட்டு எதுவும் செஞ்சுடப்படாதுன்னு என்னைத் தயார் பண்ணத்தான் அன்னிக்கு அவர் சொல்லியிருப்பார்ங்கறதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லே!'' - சொல்லி நிறுத்திய பட்டாபி சார், பெரியவாளின் நினைவுகளில் குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார்.

நன்றி – சக்தி விகடன்

No comments:

Post a Comment