Saturday, 23 February 2019

108 திவ்ய தேச திருத்தலங்கள் ||| திருவாரூர்

*கிருபாசமுத்திரப் பெருமாள் திருக்கோவில், திருச்சிறுபுலியூர், திருவாரூர்*


மூலவர் - அருமாகடலமுதன், சலசயனப் பெருமாள்
உற்சவர் - கிருபாசமுத்திரப் பெருமாள், தயாநாயகி
தாயார் - திருமாமகள் நாச்சியார்
தல மரம் - வில்வ மரம்
தலத் தீர்த்தம் - திருவனந்த தீர்த்தம், மானச தீர்த்தம்
புராணப் பெயர்கள் - சலசயனம், பாலவியாக்ரபுரம்
கோவில் உள்ள ஊர் - திருச்சிறுபுலியூர், திருவாரூர் மாவட்டம்
மங்களா சாசனம் பாடியவர் - திருமங்கையாழ்வார்

*தலச் சிறப்பு*
திவ்ய தேசங்களுள் 24ஆவதாக இருப்பது கிருபாசமுத்திரப்பெருமாள் கோவில் ஆகும். பெருமாள் புஜங்கசயனத்தில் தோற்றம். புலிக்கால் முனிவர்(வியாக்ர பாதர்) வழிபட அவருக்கு சிறுவனாக சயனக் கோலத்தில் அருளிய ஊராகையால் திருச்சிறுபுலியூர் ஆகியது.

ஆதிசேஷனுக்குத் தனிக் கோவில் உள்ளது. கன்வ முனிவருக்கு அருள் புரிந்த தலம் இது. பெருமாள் பள்ளி கொண்ட தலங்களில் சிறுவனாகத் தோற்றம் அளிப்பது இக்கோவிலில் மட்டுமே.

*தல வரலாறு*
தெற்கு நோக்கி அமைந்த திவ்ய தேசங்கள் ஸ்ரீரங்கமும் திருச்சிறுபுலியூர்ம் மட்டுமே. திருச்சிறுபுலியூரில் சிறுவனாகக் கிடந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார். நடராஜ பெருமானை வணங்கும் பதஞ்சலி முனிவரும் புலிக்கால் முனிவரும் இங்கு மூலஸ்தானத்தில் உள்ளனர் என்பது சிறப்பு.

புலிக்கால் முனிவர்(வியாக்ர பாதர்) சிவபெருமானை முக்தி அடைய வேண்டினார். சிவபெருமான் அவரிடம் பெருமாளை வேண்டுமாறு கட்டளையிட்டார். வியாக்ர பாதரும் இத்தலத்தில் வந்து வேண்டினார். பெருமாள் அவருக்கு முக்தி அளித்துத் தம் பக்கத்தில் இருத்திக்கொண்டார். பதஞ்சலி முனிவருக்கும் பெருமாள் அருள் புரிந்து அருகில் வைத்துக்கொண்டார்.

ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் ஏற்பட்ட பகையை நீக்க ஆதிசேஷன் பெருமாளை நோக்கித் தவம் இருந்தார். பெருமாள் மாசி மாதம், வளர்பிறை ஏகதசி அன்று பெருமாள் அவருக்குக் காட்சி தந்து அருள் பாலித்தார். ஆதிசேஷனைப் படுக்கை ஆக்கிகொண்டார். குழந்தை வடிவில் சயனக் கோலத்தில் பெருமாள் அங்குத் தோன்றுகிறார்.

 *வேண்டுதல்*
குழந்தை வரம் வேண்டியும் மாங்கல்ய தோஷம், கால சர்ப்ப தோஷம், செவ்வாய், பாலாரிஷ்ட தோஷம், திருமணத் தடை ஆகியவை நீங்கவும் நவக்கிரஹ பரிஹாரம் செய்யவும் பக்தர்கள் இங்கு வருகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும் மனநல பாதிப்பு உள்ளவர்களும் இங்கு வந்து வேண்டுகின்றனர்.
பெருமாளுக்கு திருமஞ்சனமும் வஸ்திரமும் அணிவித்து வழிபடுகின்றனர்.

*திருவிழாக்கள்*
சித்திரை வருடப் பிறப்பு, ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், கோகுலாஷ்டமி, நவராத்திரி பவித்ர உற்சவம், ஐப்பசி மூலத்தில் மணவாள் மாமுனிகள் உற்சவம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகதசி, மகர சங்கராந்தி, மாசி சுக்லபட்ச ஏகாதசி, பங்குனி உத்திரம்

*திவ்ய தேசத் தொகுப்பு : ஹரிகுமார்*

No comments:

Post a Comment