Tuesday, 13 March 2018

திருகாளஹஸ்தி

திருகாளஹஸ்தி நாதரின் பெருமைகள்



சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

------------------------------------------------------
------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல............)
--------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தொடர் எண்: 267*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*🏜திருக்காளத்தியப்பர், திருக்கோயில், திருக்காளஹஸ்தி.(ஆந்திர மாநிலம்.):*
------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள இரண்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:* காளத்திநாதர், காளஹஸ்தீஸ்வர சுவாமி, குடுமித் தேவர்.

*💥இறைவி:* ஞானப்பிரச்சுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை.

*🌴தல விருட்சம்:* மகிழமரம்.

*🌊தல தீர்த்தம்:* ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு.

*📔தேவாரம் பாடியவர்கள்:* சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர்.

*🌸ஆலயப் பூஜை காலம்:*
காலை 5.00 மணி முதல், பகல் 12.00 மணி வரை. மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
(செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை)

*🛣இருப்பிடம்:* ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், ரேணிகுண்டா- கூடலூர் இரயில் மார்க்கத்தில் இருப்புப் பாதை நிலையம்.

திருப்பதியிலிருந்து நாற்பது கி.மி. தொலைவிலும், சென்னையிலிருந்து நூற்று பத்து கி.மி.தொலைவிலும் இருக்கிறது இத்தலம்.

திருப்பதி-ரேணிகுண்டாவிலிருந்து நிறைய பேருந்துகள் இருக்கின்றன.

சென்னையிலிருந்தும் காஞ்சிபுரத்திலிருந்தும் நிறைய பேருந்துகள் இருக்கின்றன.

*தல அருமை:*
முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது.

தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான். வாயுதேவனே... நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன் என்றான்.

போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.

வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட,.......

கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு  தெற்கே வந்து விழுந்தன.

அந்த மூன்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.

*மலையும் சோமஸ்கந்த வடிவமைப்பு:*
இம் மலையிலிருந்து வடக்கே பார்த்தால் எதிரே துர்க்காதேவி கோயில் கொண்டிருக்கும் ஒரு மலை இருக்கிறது தெரியும்.

இதனின்று சற்றே கிழக்காகத் திரும்பினால் முருகன் எழுந்தருளியிருக்கும் குன்று ஒன்றும் தெரிகிறது.

மேலும் வடக்கே துர்க்கையும், தெற்காக காளத்தீஸ்வரரும் இடையே முருகனும் இருக்கும் இந்த முன்று மலைகளுமே சோமஸ்கந்த வடிவில் காட்சி தருகின்றன.

*மகிழ்வன:*
காளத்தி தலத்தினுள் நுழைந்தாலே முத்தி நிட்சயம் என்பது காலங்காலமாக இருக்கும் அசையாத நம்பிக்கை.

ஆகவே வாழ்க்கையில் ஒரு முறையாவது காளத்திநாதரைக் கண்குளிரக்கண்டு முத்திக்கு வழிதேட அனைவரும் அவ்விடம் சென்று வர வேண்டும் என்பது என் அவா..

*தல சிறப்பு:*
இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது வாயு தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும்.

இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும், வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம்.

அம்மனின் ஐம்பத்தோர் சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும்.

*தல பெருமை:*
கண்ணப்பர் முகலியாற்று நீரை வாயில் உறிஞ்சிக் கொண்டுவந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு வெள்ளியவிபூதி வழங்கும் வழக்கம் கிடையாது.

பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர்.

பக்தர்கள் கொண்டுவரும் திருநீறு பொட்டலத்தை இறைவன் திருவடியில் வைத்து தீபம் காட்டி எடுத்து தருகிறார்கள்.

மூலவருக்கு பச்சைக்கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் மூலவர் உள்ள லிங்க பீடமான ஆவுடையாருக்கு மட்டுமே செய்யப்படுகின்றன.

இது ராகு, கேது தலம் என்பதால் கோயிலை வலம் வருவதும் எதிர்வலமாகவே  அப்பிரதட்சிணமாகவே சுற்றி வர வேண்டும்.

பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு ஆதியிலிருந்து பூஜை செய்யும் உரிமையை கொண்டிருக்கின்றனர்.

இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன.

இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. விதிவிலக்காக சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார்.

இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள்.

அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் இருக்கிறது.

கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் மணிகண்டேசுவரருக்கு ஒரு கோயில் உள்ளது.

அதையடுத்து மலையை வெட்டி செதுக்கிய மண்டபம் ஒன்று உள்ளது. அதற்கு *மணி கர்ணிகா கட்டம்* என்று பெயர்.

இங்குதான் காசியில் உள்ள மணிகர்ணிகா கட்டத்தில் விசுவநாதர் அருளியதுபோல, பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலக்காதில் ஓதி அருளினார் என்று சொல்வர்.

இதனால் இன்றும் அந்திம திசையை நெருங்கிக்கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்திற்கு கொண்டுவந்து வலப்பக்கமாக ஒருக்களித்துச் சாய்த்துக் கிடத்தினால் சாகிறபொழுது உடல் திரும்பி வலக்காது வழியாகவே உயிர் பிரியும் என்று கூறுகிறார்கள்.

முன்காலத்தில் ரிஷிகள் பொன்முகலி ஆற்றில் நீராடிவிட்டு கிழக்கு நோக்கி தரிசித்ததால் அவர்களுக்கு காட்சி தருவதற்காக இறைவன் மேற்கு நோக்கி இருக்கிறார்.

*மூலவர் பாணம்:*
மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக இருக்கக் காரணம்.

முகலாயர் படையெடுப்பின்போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்துச் செல்வது தொடர்ந்து நடந்தது.

இவ்வாறு இனி இங்கு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் சிலை ஒன்றை  பிரதிஷ்டை செய்துவைத்து அவ்விடத்தை மூடிவிட, வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி, உடைத்துப் பார்த்து, ஒன்றும் கிடைக்காமையால் திரும்பிவிட, பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டது.

அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே இது என்று சொல்லப்படுகிறது.

நக்கீரர் இம்மலையில் வந்து தங்கி நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்றாராம்.

*சிறப்புகள்:*
அன்புக்குச்சான்றான கண்ணப்பர் வழிபட்டு இறைவனுடைய வலப்பக்கத்தில் நிற்கும் பெரும் சிறப்பு வாய்ந்த பதி இது. இவர் தொண்டாற்றி வீடு பேறு பெற்ற விழுமிய தலம்.

அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி, எனச் சிறப்பிக்கப்படும் அற்புதத் தலம்.

அருச்சுணன், தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டும், பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கி சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

மலையடிவாரத்தில் உள்ளது கோயில். இம்மலை, கைலாசகிரி (கண்ணப்பர் மலை என்றும் மக்களால்) என்று வழங்கப்படுகிறது.

(இந்நிலப்பரப்பை தொண்டைமான் ஆண்டமையை நினைப்பூட்டும் வகையில், காளத்தி செல்லும், வழியில் 'தொண்டைமான் நாடு ' என்னும் ஓர் ஊர் உள்ளது.

தற்போது தெலுங்கு நாட்டில் உள்ள பகுதியாதலின், மக்கள் தொண்டமநாடு என்று வழங்குகின்றனர்.

ஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் திகழும் இக்கோபுரம் (காளிகோபுரம்) ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டியவரும் இவரே.

கோயிலின் பிரதான வாயிலில் உள்ள இக்கோபுரமும் (பிக்ஷசாலா கோபுரம்), ஏனைய கோபுரங்களும் வீரநரசிம்ம யாதவராயரால் கட்டப்பட்டனவாகும்.

இத்தலம் அப்பிரதக்ஷண வலமுறையில் அமைந்துள்ளதை கவணிக்கத்தக்கது.

பாதாள சந்நிதியில்,
இரண்டு கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாகவ உள்ளது. இதை நன்கு  கவனித்தால்தான் தெரியும்.

பலபேர், காளத்தி சென்று வந்தேன் என்று சொன்னால், இரண்டு கால் மண்டபம் ' பார்த்தாயா? என்று கேட்கும் வழக்கம் இன்னும் உள்ளது.

சொக்கப்பனை கொழுத்தி, எரிந்த அக்கரியை அரைத்து (ரக்ஷையாக) சுவாமிக்கு கறுப்புப் பொட்டாக இடுவது இங்கு விசேஷம்.

பொன்முகலி ஆற்றுச் செல்லும் படிக்கட்டில் இறங்கும்போதே முதற்படியின் இடப்பால் தேவகோட்டை மெ. அரு. தா. இராமநாதன் செட்டியாரின், கைகூப்பி வணங்கத் தக்க உருவச்சிலை இருக்கிறது.

பிரதான கோபுரம் தக்ஷிண கோபுரம்  எனப்படுகிறது.  குலோத்துங்க சோழனின் ஆட்சியில் அவனுடைய நேரடி மேற்பார்வையில் இதற்கென நியமிக்கப்பட்ட கோயிற் குழுவினரால் இக்கோபுரம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இக்கோபுர வாயிலில் நுழைந்து வலமாக வரும்போது தரையில் வட்டமாக குறித்துள்ள இடங்களில் நின்று பார்த்தால் கைலாச மலையையும் சுவாமி விமானத்தையும் தரிசிக்கலாம்.

இங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தை, இயற்கையில் பேசவராத குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு பேச பேச்சு வரும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

இங்கு வந்து பாடிப் பரவிய சம்பந்தர், இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலிய தலங்களைப் பாடித் தொழுதார்.

ஆலங்காடு பணிந்த அப்பர் காளத்தி வந்து தொழுதபோது வடகயிலை நினைவு வர, கயிலைக் கோலம் காண எண்ணி, யாத்திரையைத் தொடங்கினார்.

திருவல்லம் தொழுது இங்கு வந்த சுந்தரர் இறைவனைப் பாடி, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார்.

மூலவர், சுயம்பு - தீண்டாத் திருமேனி. சிவலிங்கத் திருமேனி அற்புதமான அமைப்புடையது. ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது.

சுவாமி மீது தங்கக் கவசம் (பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது) சார்த்தும்போதும் எடுக்கும்போதும் கூட சுவாமியைக் அர்ச்சகர் கரம் தீண்டாது இருந்து கொள்வர்.

சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது; இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன.

சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. கருவறை அகழி அமைப்புடையது.

மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு, இது வாயுத்தலம் என்பதை நிதர்சனமாகக் உணர்த்திக்  கொ.

நாம் திருநீற்றுப் பொட்டலம் வாங்கித் கொடுத்தால் அதை சுவாமி பாதத்தில் வைத்து எடுத்து தருகிறார் அர்ச்சகர்.

மூலவருக்கு கங்கைநீரை தவிர (சுவாமிக்கு மேலே தாராபாத்திரமுள்ளது) வேறெதுவும் மேனியில் படச் செய்வதில்லை.

பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே ஆகின்றது.

சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

கிருஷ்ணதேவராயர், அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், வியாசர் முதலியோர் பிரதிஷ்டை செய்ததாக பல சிவலிங்கங்களும், ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்ததாக பெரிய ஸ்படிகலிங்கமும் இங்குள்ளது.

அம்பாள் - ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலம்; திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்த மேரு  உள்ளது.

கைலாசமலை  கண்ணப்பர் திருவடி தோய்ந்த இடம். இம்மலை இருபத்தைந்து  கி.மீ. பரப்புடையது.

இம்மலைக்காட்டில் பல இடங்களில் தீர்த்தங்களும், சிவலிங்கத் திருமேனிகள் உள்ள கோயில்களும், கண்ணப்பர் திருவுருவங்களும் உள்ளன.

திருகாளத்தி உடையார் கோயிலில் மலைமேல் ஒரு மடம் இருந்தது. இது சசிகுல சாளுக்கிய வீரநரசிங்கத்தேவன் திருக்காளத்தி தேவனான யாதவராயரால் கட்டப்பட்டது.

பொங்கல் விழாவில் ஒரு நாளிலும், பெருவிழாவில் ஒரு நாளிலுமாக ஆண்டில் இரு நாள்களில் சுவாமி இம்மலையை வலம் வருகிறார்.

அவ்வாறு வரும்போது மக்களும் மூவாயிரம் பேருக்குக் குறையாமல் உடன் செல்வார்களாம். இவ்வலம் காலைத் தொடங்கி மறுநாள் முடிவுறுகிறது.

சுவாமியின் திருக்கல்யாண விழாவின்போது பொது மக்கள் திரளாகக் கூடித் தத்தம் திருமணங்களைச் சந்நிதியில் செய்து கொள்ளும் வழக்கம் இத்தலத்தில் இருந்து வருகிறது.

தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிவேசிப்பதே முக்தி எனப்படுகிறது.

இங்கு "நதி-நிதி-பர்வதம்" என்ற தொடர் வழக்கில் உள்ளது. நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி
பொன்முகலியாற்றையும், நிதி அழியாச் செல்வமான இறைவியையும் இறைவனையும், பர்வதம் கைலாசகிரியையும் குறிப்பனவாம். இம்மூன்றையும் தரிசிப்பது விசேஷமெனப்படுகிறது.

பொன்முகலி உத்தரவாகினியாதலால் இங்கு அஸ்தி கரைப்பது மிக மிக விசேஷமாகும்.

அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷம்.

*சம்பந்தர் தேவாரம்*
பண்: சாதாரி.

1.🔔வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடம்
தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில்
ஏனமிள மானினொடு கிள்ளைதினை கொள்ளவெழி லார்கவணினால்
கானவர்த மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே.

🙏தேவர்களும் , அசுரர்களும் வருந்தித் துன்புறுமாறு பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விடத்தை , தான் அமுது போன்று உண்டு அருள் செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை எது என வினவினால் , பன்றிகள் , இளமான்கள் , கிளிகள் இவை தினைகளைக்கவர வேட்டுவ மகளிர்கள் பொன்னாலும் , இரத்தினங்களாலும் ஆகிய ஆபரணங்களைக் கவண்கற்களாக வீசி விரட்டும் சிறப்புடைய திருக்காளத்திமலையாகும் .

2.🔔முதுசினவி லவுணர்புர மூன்றுமொரு நொடிவரையின் மூளவெரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர் விரும்புமலை தன்னைவினவில்
எதிரெதிர வெதிர்பிணைய வெழுபொறிகள் சிதறவெழி லேனமுழுத
கதிர்மணியின் வளரொளிக ளிருளகல நிலவுகா ளத்திமலையே.

🙏மிகுந்த கோபத்துடன் மேருமலையை வில்லாகக் கொண்டு பகையசுரர்களின் முப்புரங்களையும் ஒருநொடிப் பொழுதில் எரியுண்ணும்படி செய்த சமர்த்தர் சிவபெருமான் . அவர் சந்திரனைத் தரித்த சடையையுடையவர் . எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்பவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் மலை , எதிரெதிராக உள்ள மூங்கில்கள் உராய்வதால் தோன்றிய நெருப்புப் பொறிகளாலும் , பன்றிகள் கொம்பினால் மண்ணைக் கிளறும்போது கிடைத்த மணிகளாலும் இருள் நீங்க விளங்குகின்ற திருக்காளத்தி மலையாகும் .

3.🔔வல்லைவரு காளியைவ குத்துவலி யாகிமிகு தாரகனைநீ
கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன் மேவுமலை கூறிவினவில்
பல்பலவி ருங்கனி பருங்கிமிக வுண்டவை நெருங்கியினமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை யாடுகா ளத்திமலையே.

🙏தாரகன் இழைத்த துன்பம் கண்டு , விரைந்து நீக்கவரும் காளியை நோக்கி , ` வலிமை மிகுந்த தாரகன் என்னும் அசுரனை நீ கொல்வாயாக ` என்று மொழிந்து அருள்செய்த சிவ பெருமான் வீற்றிருந்தருளும் மலை , பலவகைச் சுவைமிகுந்த பெரிய கனிகளின் சாற்றை அருந்தி , ஒரே கூட்டமாய் மொய்த்து , மலை அதிரும்படி கருங்குரங்குகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும் .

4.🔔வேயனைய தோளுமையொர் பாகமது வாகவிடை யேறிசடைமேல்
தூயமதி சூடிசுடு காடினட மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெய்யும் வேடன்மல ராகுநயனம்
காய்கணை யினாலிடந் தீசனடி கூடுகா ளத்திமலையே.

🙏மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , இடப வாகனத்தில் ஏறி , சடைமுடியில் தூயசந்திரனைச் சூடி , சுடுகாட்டில் நடனம் ஆடும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , வாயே அபிடேக கலசமாக வழிபாடு செய்த வேடராகிய கண்ணப்பர் , தம் மலர்போன்ற கண்ணைக் கொடிய அம்பினால் தோண்டி இறைவனுக்கு அப்பி , இறைவனின் திருவடியைச் சார்ந்த சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும் .

5.🔔மலையின்மிசை தனின்முகில்போல் வருவதொரு மதகரியை மழைபொலலறக்
கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன் மேவுமலை கூறிவினவில்
அலைகொள்புன லருவிபல சுனைகள்வழி யிழியவய னிலவுமுதுவேய்
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை சிந்துகா ளத்திமலையே.

🙏மலையின்மேல் தவழும் மேகம்போல் வந்த மதம்பொருந்திய யானையானது இடிபோல் பிளிற , அதனைக் கொன்று உமாதேவி அஞ்சும்படி அதன் தோலைப் போர்த்திக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , அலைகளையுடைய நீர் மலையிலிருந்து அருவிபோல் இழிந்து , பல சுனைகளின் வழியாக வயல்களில் பாய , அருகிலுள்ள முற்றிய மூங்கில்கள் கலகல என்ற ஒலியுடன் , கதிர்போல் ஒளிரும் முத்துக்களைச் சிந்தும் திருக்காளத்திமலையாகும் .

6.🔔பாரகம் விளங்கிய பகீரத னருந்தவ முயன்றபணிகண்
டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை யேற்றவரன் மலையைவினவில்
வாரத ரிருங்குறவர் சேவலின் மடுத்தவ ரெரித்தவிறகில்
காரகி லிரும்புகை விசும்புகமழ் கின்றகா ளத்திமலையே.

🙏பாரதபூமியில் சிறந்து விளங்கிய பகீரதன் என்னும் மன்னன் , பிதிரர்கட்கு நற்கதி உண்டாகுமாறு அரியதவம் செய்து வானிலுள்ள கங்கையைப் பூவுலகிற்குக் கொண்டுவர , அவனுக்கு அருள்செய்து , பெருக்கெடுத்த கங்கையைத் தன் சடையில் தாங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நெடிய வழிகளையுடைய கானகக் குறவர்கள் தங்கள் குடிசையில் அடுப்பெரித்த , கரிய அகில் கட்டையிலிருந்து கிளம்பிய பெரியபுகை ஆகாயத்தில் மணக்கின்ற திருக்காளத்திமலையாகும் .

7.🔔ஆருமெதி ராதவலி யாகிய சலந்தரனை யாழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவ னிருந்தமலை தன்னைவினவில்
ஊருமர வம்மொளிகொண் மாமணி யுமிழ்ந்தவை யுலாவிவரலால்
காரிருள் கடிந்துகன கம்மென விளங்குகா ளத்திமலையே.

🙏தன்னை எதிர்த்துப் போர்செய்ய யாரும் வாராத , வலிமை மிகுந்த சலந்தராசுரனின் தலையைச் சக்கராயுதத்தால் பிளந்து தேவர்கட்கு அருள்புரிந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , ஊர்ந்து செல்லுகின்ற பாம்புகள் உமிழ்ந்த இரத்தினங்களின் ஒளியால் கரிய இருள் நீங்கப் பெற்று , பொன்மலைபோல் பிரகாசிக்கின்ற திருக்காளத்தி மலையாகும் .

8.🔔எரியனைய சுரிமயி ரிராவணனை யீடழிய எழில்கொள்விரலால்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன் மேவுமலை பெற்றிவினவில்
வரியசிலை வேடுவர்க ளாடவர்க ணீடுவரை யூடுவரலால்
கரியினொடு வரியுழுவை யரியினமும் வெருவுகா ளத்திமலையே.

🙏நெருப்புப்போல் சிவந்த சுருண்ட முடிகளையுடைய இராவணனின் வலிமை அழியுமாறு , தன் அழகிய காற்பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அவனை அழுத்தி , பின் அருள்செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நீண்ட வில்லேந்திய வேடர்கள் நெடிய மலையினூடே வருவதால் , யானைகளும் , வரிகளையுடைய புலிகளும் , சிங்கக் கூட்டங்களும் அஞ்சுகின்ற திருக்காளத்திமலையாகும் .

9.🔔இனதளவி லிவனதடி யிணையுமுடி யறிதுமென விகலுமிருவர்
தனதுருவ மறிவரிய சகலசிவன் மேவுமலை தன்னை வினவில்
புனவர்புன மயிலனைய மாதரொடு மைந்தரு மணம்புணருநாள்
கனகமென மலர்களணி வேங்கைக ணிலாவுகா ளத்திமலையே.

🙏குறிப்பிட்ட இந்தக் கால எல்லைக்குள் இவன் திருவடியும் , திருமுடியும் அறியவேண்டும் என்று தமக்குள் மாறுபட்ட திருமாலும் , பிரமனும் முனைந்து தேடியும் அறிவதற்கு அரியவனாய் விளங்கியவன் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருக்கும் மலை , தினைப்புனத்திலுள்ள வேடுவர்கள் மயிலொத்த சாயலுடைய பெண்களை மைந்தர்களுக்கு மணம் செய்விக்கும் நாளில் பொன் போன்ற மலர்களைப் பூத்து அழகிய வேங்கைகள் விளங்கும் திருக்காளத்திமலையாகும் .

10.🔔நின்றுகவ ளம்பலகொள் கையரொடு மெய்யிலிடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன் மேவுமலை நாடிவினவில்
குன்றின்மலி துன்றுபொழி னின்றகுளிர் சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை யாடுகா ளத்திமலையே.

🙏நின்று கொண்டே கவளமாக உணவு உண்ணும் சமணர்களும் , உடம்பில் போர்த்த போர்வையுடைய புத்தர்களும் தனது பேரருளை அறியாவண்ணம் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நெருங்கிய சோலைகளில் உள்ள குளிர்ந்த சந்தனத் தழைகளைத் தம் கன்றுகளுடன் சென்று தின்று பெண் யானைகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும் .

11.🔔காடதிட மாகநட மாடுசிவன் மேவுகா ளத்திமலையை
மாடமொடு மாளிகைக ணீடுவளர் கொச்சைவய மன்னுதலைவன்
நாடுபல நீடுபுகழ் ஞானசம் பந்தனுரை நல்லதமிழின்
பாடலொடு பாடுமிசை வல்லவர்க ணல்லர்பர லோகமெளிதே.

            திருச்சிற்றம்பலம்.

🙏சுடுகாட்டை அரங்காகக் கொண்டு ஆடுகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற காளத்திமலையைப் போற்றி , மாடமாளிகைகள் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள கொச்சைவயம் என்னும் சீகாழியின் நிலைபெற்ற தலைவனும் , பலநாடுகளிலும் பரவிய புகழையுடையவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல தமிழில் அருளிய இப்பாடல்களை இசையுடன் ஓத வல்லவர்கள் சிறந்தவர்களாவர் . அவர்கள் சிவலோகம் அடைதல் எளிதாகும் .

           திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
மாசித்திருநாள், திருக்கார்த்திகை, வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் விழா, பொங்கல், மகா சிவராத்திரி பத்துநாட்கள் உற்சவம். திருத்தேர் பவனி. சிவராத்திரி இரவு நந்திசேவை தரிசிக்க சிறப்பு, சிவராத்திரியில் மலை வலம் வரும் விழா.



-------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment